இன்று (ஒக்டோபர் 1) உலக சிறுவர் தினமும், உலக முதியோர் தினமும் முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், நாட்டின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளில் இருப்பதால் அவர்களின் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, சமூகப் பாதுகாப்பு மற்றும் அனைத்து விதமான வன்முறை, துஷ்பிரயோகம், பாகுபாடு ஆகியவற்றிலிருந்து அவர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையென அவர் வலியுறுத்தியுள்ளார்.
“பாடசாலை செல்லும் வயதுடைய எந்த பிள்ளையும் இனம் அல்லது பொருளாதார காரணங்களால் கல்வியிழக்கக் கூடாது. ஒட்டிசம் உள்ளிட்ட வளர்ச்சி குறைபாடுகளுடன் கூடிய குழந்தைகளுக்கான சேவைகளையும் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த முதியவர்களின் பங்களிப்பை பாராட்டி, அவர்களுக்கு மரியாதை செலுத்துவது சமூகத்தின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
“சிறுவர்களும் முதியவர்களும் பாதுகாப்பும் மரியாதையும் பெறும் இலங்கையை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.








