அமேசான் மழைக்காடுகளின் ஆழமான பகுதியில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தின் வான்வழிக் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
விமானத்தில் பயணித்த ஒருவர் தொலைவில் இருந்து பதிவு செய்ததாகக் கூறப்படும் குறித்த காணொளியில், அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ள சில குடிசைகள் தென்படுகின்றன.
அமேசான் மழைக்காடுகள் தென் அமெரிக்காவின் பல நாடுகளில் பரந்து விரிந்துள்ளதுடன், பல்வேறு பழங்குடியின சமூகங்களின் வாழ்விடமாகவும் காணப்படுகின்றன. குறிப்பாக, வெளி உலகத்துடனான தொடர்பைத் தவிர்த்து வாழும் சில பழங்குடியின சமூகங்களும் இப்பகுதிகளில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த காணொளியில் காணப்படும் கிராமம் மற்றும் அதில் வசிக்கும் மக்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு காணொளி தொலைவில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமேசான் காடுகள் சட்டவிரோத மரவெட்டல், சுரங்க நடவடிக்கைகள் மற்றும் காடழிப்பு உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், பழங்குடியின மக்களின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது தொடர்பிலும் சர்வதேச அளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.







