மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் உள்ள அதிகஸ்ட பிரதேசமான திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கான பாண்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (15) தினம் நடைபெற்றது.
சிரேஸ்ட ஊடகவியலாளரும், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய லண்டனில் வசிக்கும் பாலேந்திரா சுகன்யா குடும்பத்தினரின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு செங்கலடி சேவகம் நிறுவனத்தின் ஊடாக இரண்டு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் (225000/-) பெறுமதியான பாண்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு அதிகஸ்ட பிரதேசமாக காணப்படும் திகிலிவெட்டை பாடசாலை மாணவர்களுக்கு நகர்புற பாடசாலைகளுக்கு இணையாக பாண்ட் வாத்திய குழுவை உருவாக்க வேண்டும் என்பது இதுவரை காலமும் ஒரு கனவாகவே இருந்து வந்த நிலையில் அது குறித்து சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான நிலாந்தன் அவர்களிடம் பாடசாலை அதிபரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய இந்த பாண்ட் வாத்திய கருவிகள் கையளிக்கப்பட்டிருந்தன.
ஒரு வார காலத்திற்குள் ஆசிரியர், அதிபர் ஆகியோரின் முயற்சியில் பாண்ட் வாத்திய பயிற்சிகள் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் நிகழ்வில் மாணவர்கள் மிகவும் சிறப்பான முறையில் பாண்ட் வாத்தியங்களை இசைத்து வரவேற்பு நிகழ்வை நடாத்தியிருந்தனர்.
இதன் போது பாண்ட் வாத்தியங்களை பெற்றுக் கொள்ள நிதி உதவி வழங்கி லண்டனில் வசிக்கும் பாலேந்திரா சுகன்யா குடும்பத்தினருக்கு பாடசாலை அதிபர் தனது நன்றிகளை தெரிவித்திருந்தார்.
பாடசாலை அதிபர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக லண்டனில் இருந்து வருகை தந்த பாலேந்திரா சுகன்யா மற்றும் அவரது புதல்வரான பிரணவன், வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சுதாகரன், சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான நிலாந்தன் ஆகியோர் கலந்து கொண்டதோடு. கௌரவ பாராளுமன்ற சாணக்கியனின் கல்குடா தொகுதி இணைப்பாளர் நிலக்சன், திகிலிவெட்டை பிரதேச சபை உறுப்பினர் சிவராசா, சேவகம் நிறுவனத்தின் பொருளாளர் சுபோஜன், சேவகம் நிறுவனத்தின் உறுப்பினர்களான ஜெயராஜ், ஜிவா, கயல்விழி, மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
























