மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும், செய்தி சேகரிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியாளர்களால் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்றைய தினம்(31.08.2023) இடம்பெற்றிருந்த நிலையில் சில ஊடகவியலாளர்களுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தது.
இது தொடர்பில் நடந்த விடயம்
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மட்டு ஊடகவியலாளர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு என்றும் இல்லாத புதிய கட்டுப்பாடு ஒன்று விதிக்கப்பட்டிருந்தது. அதாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஊடகவியலாளர்களிடம் அவர்கள் தனிப்பட்ட ஊடக அடையாள அட்டை தவிர்ந்து இலங்கை ஊடக அமைச்சினால் வழங்கப்படும் தகவல் பெற்றுக்கொள்வதற்கான ஊடக அடையாள அட்டை கட்டாயம் இருக்கவேண்டும் என்பதே, ஆனால் ஊடக அமைச்சினால் அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தாலும் மட்டு மாவட்ட செயலக ஊடகப்பிரிவினால் ஒரு கடிதம் வழங்கப்பட்டால் மாத்திரமே அனுமதி அது இல்லாதவர்கள் கலந்து கொள்ள முடியாது ஆனால் என்றும் இல்லாத இந்த புதிய சட்டம் புதிதாக கொண்டுவந்தற்கான காரணம் என்ன? இதற்கு அனுமதியளித்தது யார்? என்று கேட்டே ஊடகவியலாளர்கள் இன்று பிரதேச செயலகத்திற்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில் அக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியாளர்களால் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கடந்த பல ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வந்த சில ஊடகவியளார்கள் இன்றைய கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு சில ஊடகவியலாளர்களைப் பழிவாங்கும் நோக்குடன் இவ்விடயம் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக முன்றலில் ஊடகவியலாளர்களால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது
இவ்விடயத்தை இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஊடக அமைச்சருக்கு தெரியப்படுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் முயற்சி செய்த போதும் அது கைகூடவில்லை என கூறப்படுகிறது.
அதைனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட ஊடக உரிமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையகத்தின் மட்டக்களப்பு காரியாலயத்தில் முறைப்பாடொன்றினையும் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தியை ஊடகவியலாளர் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.