வாகரை கண்டலடி மற்றும் புளியங்கண்டலடியை இணைக்கும் ஊத்துமடுப் பகுதியில் ஓர் சிறிய பாலம் இன்மையால் பிரதேச மக்கள் நீண்ட கால நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகிறார்கள்.
மழைக்காலத்தில் ஆளுயரத்திற்கு வெள்ளம் செல்லும் பகுதி என்பதால் புளியங்கண்டலடியில் வருட இறுதி மேட்டுப் பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் சிக்கலுக்கு முகம் கொடுக்கிறார்கள்.
மாரி மழை காலத்தில் பாடசாலை செல்லும் மாணவர்களும் போக்குவரத்துக்கு கஷ்டப்படுகிறார்கள். மரணம் ஏற்பட்டாலும் பல கிலோமீட்டர் சுற்றியே மயானத்திற்குச் செல்ல வேண்டும். ஓர் சிறிய இணைப்பு பாலம் இருந்தால் இத்தனை சிக்கல்களையும் தீர்க்க முடியும்.

இது தொடர்பாக பிரதேச மக்கள் இந்தப் பாலம் தொடர்பில் கல்குடாத் தொகுதி அமைப்பாளரும், இளைஞர் விவகார அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான தோழர் திலிப்குமாரிடம் வேண்டுகோள் முன் வைத்ததையிட்டு மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரான கைத்தொழில் அமைச்சர் தோழர் சுனில்ஹந்துன்நெத்தி கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார் .
இதன் நிமித்தம் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சினால் மட்டக்களப்பிற்கு விசேட நிதியாக விடுவிக்கப்பட்ட 250 மில்லியன் ரூபாய்களில் 24 மில்லியன்கள் பெறுமதியான நிதியானது குறித்த பாலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
குறித்த திட்டம் தொடர்பாக கல்குடாத் தொகுதி அமைப்பாளரும், இளைஞர் விவகார அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான தோழர் திலிப்குமார் ஊத்துமடுப் பகுதிக்கு நேரடியாகச் சென்று பாலம் அமையவுள்ள பகுதியைப் பார்வையிட்டார்.









