மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு கிராமசேவகர் பிரிவில் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தி மற்றும் அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக செங்கலடி பிரதேச சபைத் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதனுக்கு பொதுமக்கள் ஊடாக முறைப்பாடுகள் கிடைத்த நிலையில் அடையாளம் காணப்பட்ட சில இடங்களை சந்திவெளி பொலிஸ் நிலைய அதிகாரி உட்பட செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட சித்தாண்டி சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து குறித்த இடங்களுக்கு சென்று பார்வையிட்டு அங்குள்ளவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
தவிசாளர் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இனங்க கசிப்பு விற்பனை செய்யப்படுவதாக இனங்காணப்பட்ட மாவடிவேம்பிலுள்ள சில இடங்களுக்கு இன்றிலிருந்து இரண்டு பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபடுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
கசிப்பு உற்பத்தி விற்பனை மற்றும் கசிப்பு அருந்துபவர்களினால் தொடர்ச்சியாக அருகிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தங்களின் ஆதங்கங்களை தெரிவித்தனர்.
இரவுவேளையில் தனியாக தூங்க முடியாதுள்ளதாகவும், பிரதேச சபையினால் வீதி மின் விளக்குகள் போடப்பட்டாலும் கசிப்பு விற்பனை செய்பவர்களால் இரவு வேளையில் கசிப்பு கொண்டுவரும் வீதிகளிலுள்ள மின்குமிழ்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலைக்கு பிள்ளைகள் செல்லமுடியாத அளவிற்கு அப்பகுதியிலுள்ள மாணவர்களின் கல்வி நிலையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கை எடுத்து கும்பிடுகின்றோம் இந்த பகுதியிலுள்ள கசிப்பு உற்பத்தி விற்பனையை குறையுங்கள் என தவிசாளர் முன்னிலையில் தெரிவித்தனர்.
நேற்று (05) இடம்பெற்ற கசிப்பு தொடர்பான சுற்றிவளைப்பில் சித்தாண்டி சிவில் சமூக செயற்பாட்டு இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை செய்கின்ற இடங்களை கட்டுப்படுத்தும்வரை தங்களின் கிராமம்சார் சமூச செயற்பாடுகள் பொலிஸாருடன் இணைந்து தொடரும் என தெரிவித்ததுடன் சித்தாண்டியில் பல இடங்கள் தற்போது கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் இருந்து தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாவும் தெரிவித்தனர்.















