தங்களுக்கு தொலைத்தொடர்பு வசதிகளை வழங்கும் என கூறி முன்பணம் பெற்றுக்கொண்ட பிறகு, எந்தவித முன்னறிவித்தலுமின்றி கடந்த 27ஆம் திகதியிலிருந்து இன்றுவரை சேவையை நிறுத்திய இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக, பொதுமக்கள் சார்பில் இரண்டு நபர்கள் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
முறைப்பாட்டை முன்வைத்தவர்களான U.L. அன்சார் மற்றும் மற்றொரு நபர் தெரிவித்ததாவது , இந்நிறுவனங்கள் சேவை வழங்காமல் இருந்த நாட்களுக்கும் கூட பணத்தை வசூலித்துள்ளதால், இது நேரடி மோசடி மற்றும் ஏமாற்று செயல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேலும், தொலைத்தொடர்பு வசதிகள் திடீரென இடைநிறுத்தப்பட்டதால், அவர்களின் தொழில் நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

நாட்டில் பேரிடர் ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் முன்னறிவிப்பில்லாத இந்த சேவைத் தடை காரணமாக, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நலன்களைத் தொடர்புகொண்டு அறிய முடியாத நிலை ஏற்பட்டதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டது என்றும் முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதனால், இந்த இரண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தி, உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த முறைப்பாடு தனிப்பட்டது அல்ல பாதிக்கப்பட்ட அனைத்து மக்களினதும் சார்பாக முன்வைக்கப்பட்ட பொதுமக்கள் முறைப்பாடாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.








