செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்களைப் பெறாமல் சட்டவிரோதமாக இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயச் சேவைகளை வழங்கி வந்த 24 இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கைக்குள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் செயல்படும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL), நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் அறிவித்தலின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் விதிகளின்படி, உரிய அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் இணையவழி சூதாட்டச் சேவைகளை நடத்துவதோ அல்லது அவற்றை விளம்பரப்படுத்துவதோ சட்டவிரோதமான குற்றமாகும். குறிப்பாக, அந்தச் சட்டத்தின் 15, 16 மற்றும் 18 ஆம் பிரிவுகளின் கீழ் அனுமதி பெறுவது கட்டாயமாகும் என்றும், அவற்றை மீறுவது 44 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சட்டவிரோதமாக இயங்கியதாக அடையாளம் காணப்பட்ட 24 இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கைக்குள் தடுக்க அனைத்து தொலைத்தொடர்புச் சேவை வழங்குநர்களுக்கும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு தேவையான உத்தரவுகளை வழங்கியுள்ளது.
தடை செய்யப்பட்ட இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயச் சேவைகளை வழங்கிய நிறுவனங்களின் பெயர் பட்டியல் தனியாக வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








