1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு கல்முனை வழியாக காத்தான்குடி நோக்கிப் பயணித்த முஸ்லிம் பக்தர்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு, களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி தொடர்பான இந்த வழக்கு, மேலதிக விசாரணைகள் மற்றும் வழக்கு மாநாட்டிற்காக அழைக்கப்பட்டிருந்ததுடன், அன்றைய தினம் அறிவித்தல் நாளாகவும் குறிக்கப்பட்டிருந்தது.
முந்தைய விசாரணையின்போது சோகோ பொலிஸ் பிரிவினர், பிரதான சட்ட வைத்திய அதிகாரி, மட்டக்களப்பு காணி பதிவாளர், பிரதேச செயலாளர், தொல்லியல் திணைக்களம் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் ஆகியவற்றுக்கு நீதிமன்ற அறிவித்தல் அனுப்பப்பட்டிருந்தது. எனினும், இம்முறை நடைபெற்ற விசாரணையில் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தின் சார்பில் மட்டுமே சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகியிருந்தார். ஏனைய அரச துறைகளின் அதிகாரிகள் எவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை முன்னிட்டு அகழ்வுப் பணிகளை தாமதமின்றி முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தி தேவையான நீதிமன்ற உத்தரவுகளை வழங்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து, மேலதிக நடவடிக்கைகள் மற்றும் வழக்கு மாநாட்டிற்காக இந்த வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 24 ஆம் திகதிவரை ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்.
இந்த தகவலை, வழக்கின் பிரத்தியட்ச முறைப்பாட்டாளரான ரவூப் அப்துல் மஜீத் சார்பில் ஆஜரான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்தார்.








