பிரதமரின் கோரிக்கைக்கமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் பிரகாரம் இன்று 18 ஆம் திகதி கூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சபை அமர்வு நாளை 19ஆம் திகதியும் கூடுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (17) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

இன்று வியாழக்கிழமை மு.ப 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான 500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு அன்றையதினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும். இதனைத் தொடர்ந்து மோசமான காலநிலையின் தாக்கத்தால் அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதம் மாலை 5.30 மணி வரை இடம்பெறவுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை பாராளுமன்ற அமர்வு இடம்பெறவிருப்பதுடன், அன்றையதினம் 500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்படவுள்ளது.








