பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை ரத்து செய்ய முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலத்தின் அரசியலமைப்பு செல்லுபடியாக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கி, உச்ச நீதிமன்றத்தில் இரண்டு விசேட தீர்மான (Special Determination) மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
“Parliamentary Pensions (Repeal) Bill” எனப் பெயரிடப்பட்ட இந்தச் சட்டமூலம், 2026 ஜனவரி 7 அன்று நீதியமைச்சரும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
முதல் மனுவை, 2004 முதல் 2010 வரை பாராளுமன்ற உறுப்பினர்களாக பணியாற்றிய எம்.எம். பிரேமசிறி, நவரத்னே பண்டா, நிஷாந்த தீபால் குணசேகர மற்றும் சமன் சிறி ஹேரத் ஆகிய முன்னாள் எம்.பிக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இரண்டாவது மனுவை, 1988 முதல் 2004 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பியசோம உபாலி மற்றும் 1988 முதல் 2000 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த உபாலி சரத் தன்ஸ்டன் அமரசிறி ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

மனுதாரர்கள் தெரிவிப்பதாவது, 5 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் வரை பாராளுமன்ற சேவை செய்த ஓய்வு பெற்ற உறுப்பினர்கள் பலர் உள்ளனர். அவர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் பொது சேவைக்காக அர்ப்பணித்ததன் காரணமாக, தங்களது தொழில், வணிகம் அல்லது வர்த்தக வாய்ப்புகளை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சில விதவைகள் உட்பட பல ஓய்வு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் முழுமையாக ஓய்வூதியத்தையே சார்ந்துள்ளனர் என்றும், தற்போது அவர்கள் பெறும் ரூ. 60,000 – 80,000 அளவிலான ஓய்வூதியம் மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய போதுமானதல்ல என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
எனவே, இந்தச் சட்டமூலத்திற்கு மக்கள் கருத்துக்கணிப்பு (Referendum) மூலம் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும், அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை (Two-Thirds Majority) அவசியம் என்றும் அறிவிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
இந்த மனுக்கள் வழக்கறிஞர் சனத் விஜேவர்தன மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், டாக்டர் விஜயதாச ராஜபக்ஷ, அவர்களின் ஆதரவுடன் முன்வைக்கப்பட்டுள்ளன.








