“தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும் என ஐ.நா. கூட வலியுறுத்திய போதும் குரல் கொடுக்காத எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்தித் ஆண்டகை மற்றும் ஏனையவர்கள் உயிர்த்த ஞாயிறு தினச் சம்பவத்தை வைத்துக்
கொண்டு அரசியல் நடத்துவது உண்மையிலே கேவலமான விடயம்.”- இவ்வாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக
சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில், “உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக ‘சனல் 4’ வெளியிட்ட தகவலானது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்ற நிலை காணப்படுகின்றது. இன்று தென்னிலங்கையில் உள்ளவர்களும், கர்தினால் கூட இந்த உயிர்த்த
ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை
முன்வைக்கின்றனர்.
நாங்களும் இது தொடர்பாக சர்வதேச விசாரணை மற்றும் சர்வதேச நீதிமன்றத்துக்கு இதனைக் கொண்டு
செல்ல வேண்டும் என்று சொல்வதுடன், விரைவாக இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைவிடுக்கின்றோம். ஆனால், இந்த விடயம் ஜனாதிபதித் தேர்தலை முன்னிறுத்தியே தற்போது பேசுபொருளாக இருப்பதாகவே நான் கருதுகின்றேன். ஏனெனில் கடந்த காலத்தில் எங்களுடைய மக்கள் மீதான மனித உரிமை மீறல் சம்பந்தமாக -ராஜபக்ஷ குடும்பம் படுகொலை செய்ததன் அடிப்படையில் ஐ.நா. சபை கூட கண்டனம் தெரிவித்து, இதனை முழு ஒத்துழைப்போடு விசாரணை செய்யப்பட வேண்டும்
என்ற கோரிக்கையை இலங்கை அரசிடம் முன் வைத்தது.
நாங்களும் இந்த விடயத்தில் சர்வதேச விசாரணை செய்யப்பட வேண்டும் அல்லது சர்வதேச நீதித்துறையைச் சார்ந்தவர்கள், சர்வதேச வழக்கறிஞர்களை அழைத்து விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம். ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தில் குரல் கொடுக்காத எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்தித் ஆண்டகை மற்றும் ஏனையவர்கள் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசியல் நடத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும்.
இந்த நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என அவர்கள் மனச்சாட்சியுடன் எண்ணி இருந்திருந்தால், கடந்த காலங்களிலே மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பம்
மேற்கொண்ட அட்டூழியங்களுக்கு எதிராகவும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்க வேண்டும். பேராயர் கர்தினால் உட்பட இந்த விடயத்தில் அவர்கள் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. கடந்த காலங்களில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் எல்லாம் அவர்களுக்கு உறுத்தாத ஒரு நிலை. மனச்சாட்சி வேலை செய்யாத நிலை. இப்போது உயிர்த்த
ஞாயிறு விடயத்தில் அவர்கள் நீதி கோருகின்றார்கள். நாமும் அதனை வலியுறுத்தும் நிலையில், ஏன் இவர்கள் எமது மக்களின் உரிமை மீறல்கள் தொடர்பில் குரல் கொடுக்க வில்லை? இதனைக் கண்டு கொள்ளாது இந்த நேரத்தில் இவர்கள் கூக்குரல் இடுவது என்பது வேடிக்கையாகும்.
உயர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கூடப் படு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால், இதனை ஒரு தேர்தல் உத்தியாகப் பாவிக்க வேண்டாம். படுகொலை செய்யப்பட்ட எல்லா மக்களுக்கும் நீதி வேண்டும். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர், தென்னிலங்கை அரசியல்வாதமிகள் எல்லோரும் மனச்சாட்சியுடன் செயற்பட வேண்டும்.
எமது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். சர்வதேச விசாரணை தேவை என ஐ.நாவிடம் கூடக் கேட்டுள்ளோம். ஆனால், அதற்கெல்லாம் செவிமடுக்காத தென்னிலங்கை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் தற்போது சர்வதேச விசாரணை வேண்டுமெனக் கூக்குரல் இடுவது ஜனாதிபதித் தேர்தலுக்கான கூக்குரல் எனச் சந்தேகப்படுகின்றேன்.
எமது மக்களது உரிமை மீறல்களுக்கும் சர்வதேச விசாரணை தேவை என்பதையும் அவர்கள் அழுத்தம்
கொடுக்க வேண்டும். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விடயத்தில் கூறுவது போன்று எமது மக்களின் விடயத்திலும் – எமது மக்களின் உரிமை மீறல் விடயத்திலும் கவனம் செலுத்தி குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதற்கு எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும்.” – என்றார்.