“உங்கள் வெற்றி சாதாரணமானது அல்ல…!” – இந்த வார்த்தைகள் உண்மையென நிரூபிக்கப்பட்டது யாழ் பல்கலையின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாவது நாளில்.
கடந்த சனிக்கிழமை (21.02.2026) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், சுன்னாகம் வாழ்வகம் நிறுவனத்தைச் சேர்ந்த விழிப்புலனற்ற மாணவர்களான துரைராசா அருண்குமார் மற்றும் செல்வி சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டனர்.
துரைராசா அருண்குமார் தனது கல்விப் பயணத்தை 11வது வயதில் தான் ஆரம்பித்தார். தரம் ஒன்றில் கல்வியைத் தொடங்கிய அவர், பல சவால்கள் மற்றும் தடைகளை தாண்டி இன்று பல்கலைக்கழக பட்டதாரியாக உயர்ந்துள்ளார். அவரின் விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் உறுதியான மனப்பாங்கு அனைவருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது.

அதேபோல், சிவபாதசுந்தரம் அனந்தினியும் விழிப்புலனற்ற நிலையிலும் தன்னம்பிக்கையுடன் கல்வியை முன்னெடுத்து, வெற்றிகரமாக தனது பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர்களின் சாதனை, உடல் குறைபாடுகள் வெற்றிக்குத் தடையல்ல என்பதை சமூகத்துக்கு வலியுறுத்துகிறது.
சுன்னாகம் வாழ்வகம் நிறுவனத்தின் ஆதரவு, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் குடும்பத்தினரின் உறுதுணை ஆகியவை இந்த வெற்றியின் பின்னணியில் முக்கிய பங்காற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு பட்டதாரிகளுக்கும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
வாழ்த்துக்கள் இருவருக்கும்! 🎓👏









