செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, நாளை காலை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவில்லை என்றும், தற்போது செம்மணி மனிதப் புதைகுழியில் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்த விவகாரங்களுக்கு சுயாதீனமான சர்வதேச விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் இன அழிப்புக்கான முக்கிய ஆதாரங்களாகக் கருதப்படும் இவ்விவகாரங்களை மறைக்கவும், அவற்றின் முக்கியத்துவத்தை குறைக்கவும் இலங்கை அரசு முயற்சிப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதேவேளை, நீதி கோரி நீண்டகாலமாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில், நாளை செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதிகள் குழுவின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 8.00 மணிக்கு செம்மணி வளைவுப் பகுதியில் நடைபெறவுள்ள இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக அமைப்புகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.







