மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியும் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசிய கட்சிகளும் சில விடயங்களில் ஓரணியாக செயல்படுவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. இந்த யோசனையை தமிழர் முற்போக்கு கூட்டணியே முன்வைத்திருக்கின்றது. இது ஒரு நல்ல யோசனை. இன்றைய நெருக்கடியான சூழலில், எண்ணிக்கையில் சிறுபான்மையான மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கிடையில் சில இணக்கப்பாடுகள் எட்டப்படுவது முக்கியமானது. மலையகக் கட்சிகளின் அரசியல் எதிர்பார்ப்புகளும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் அரசியல் எதிர்பார்ப்புகளும் ஒன்றல்ல. அடிப்படையிலேயே சில வேறுபாடுகள் உண்டு – எனினும் சில விடயங்களில் இணைந்து செயல்படுவதில் தவறில்லை. தவிர, சில விடயங்களில் கட்டாயம் இணைந்துதான் பயணிக்க வேண்டும்.
அரசியலமைப்பில் இருக்கின்ற ஏற்பாடுகளை அமுல்படுத்தும் விடயங்கள், மனித உரிமைகள் சார்ந்த விடயங்கள் மற்றும் அடிப்படையான ஜனநாயக சூழலை உறுதிப்படுத்துவது – போன்ற விடயங்களில் கட்டாயம் ஒன்றிணைந்த செயல்பாடுகளும் இணக்கமான தந்திரோபாய அணுகுமுறைகளும் கட்டாயமானது. நாம் என்னதான் உரத்துப் பேசினாலும் இந்தியாவிடமும் மேற்குலகத்திடமும் கோரிக்கைகளை முன்வைத்தாலும்கூட, அவர்கள் சிங்களவர்கள் அல்லாதவர்களின் பிரச்னையைசிறுபான்மை மக்களின் பிரச்னையாவே நோக்குகின்றனர். எண்ணிக்கையில் சிறுபான்மையான மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளிடம் ஒருங்கிணைந்த வேலைத்திட்டமொன்று அவசியமென்றே அவர்கள் கருதுகின்றனர். நாங்கள் எங்களை தேசமாக கருதிக்கொள்வது – அதனை உறுதியாக நம்புவது என்பதெல்லாம் வேறு விடயம்.
அண்மையில், இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான கீழ்நிலை செயலர் விக்டோரியா நூலண்ட் எதிரணியில் இருக்கின்ற மலையக மறறும்வடக்கு, கிழக்கு கட்சிகளை ஓரணியாகவே சந்தித்திருந்தார். இந்த சந்திப்பில் வழக்கத்துக்கு மாறாக கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அழைக்கப்பட்டிருந்தார். எங்களுடைய பிரச்னை வேறானது எங்களைத் தனியான தரப்பாகத்தான் அணுக வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கட்சிகள் வாதிடவில்லை. அவ்வாறு வாதிட முற்பட்டால் அமெரிக்க தூதரகத்துடன் முரண்பட வேண்டியேற்படும். இந்த சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸூம் அழைக்கப்பட்டிருந்தது.
இத்தனை கட்சிகளையும் ஒரு குறுகிய நேரத்திற்குள்தான் விக்டோரியா சந்தித்திருந்தார். இதிலிருந்தே ஒரு விடயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, இலங்கையின் உள் விவகாரம், அமெரிக்காவுக்கு அப்படியொன்றும் தலைபோகும் விடயமல்ல. அமெரிக்காவைப் பொறுத்த வரையில் இது ஒரு மிகச் சிறிய பிரச்னை மட்டுமே. உலகளவிலான அமெரிக்க அணுகுமுறையில் இலங்கையின் மீதும் ஓர் அவதானமுண்டு. அந்த அடிப்படையில் சில விடயங்களில் அமெரிக்கா ஈடுபாடு காட்டுகின்றது.
இந்த விடயங்களிலிருந்து நாங்கள் எதனைப் புரிந்துகொள்கின்றோம்? முடிந்தவரைக்கும் தமிழ்த் தேசிய கட்சிகள் தங்களின் நண்பர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் கூட்டிணைவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பிரத்தியேகமான பிரச்சனைகளுக்காக தனியாக இயங்க வேண்டியிருந்தாலும்கூட, இலங்கைக்குள் சவாலுக்கு உள்ளாக்க வேண்டிய விடயங்களில் முடிந்தவரைக்கும் அனைத்து நட்பு சக்திகளும் ஓரணியாக நின்று இயங்குவதும் ஜனநாயக ரீதியில் போராடுவதும் முக்கியமானது. மனோ கணேசன் போன்றவர்கள் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நியாயங்களோடு இணைந்து பயணிப்பவர்கள். அதற்கு மாறாக ஒருபோதும் செயல்பட்டவர்கள் அல்லர். அவர்களோடு ஒன்றிணைந்து பயணிப்பதற்கான வாய்ப்பு கிட்டுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸூம் அந்த சந்தர்ப்பத்தை தவறவிடக் கூடாது.