பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் அனைவரும் திருடர்கள், மோசடிக்காரர்கள், ஊழல்வாதிகள் என இலங்கையிலுள்ள ஊடகங்கள் எவ்வித பொறுப்பும் இன்றியும் சாட்சியங்களும் இன்றி அறிக்கை விடுகின்றன என வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
“.. கௌரவ சபாநாயகர் அவர்களே, இந்த உயரிய சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் இந்த நாட்டிலுள்ள ஊடகங்கள் எந்தப் பொறுப்பும் இன்றி, சாட்சிகளும் இன்றி, திருடர்கள், மோசடிக்காரர்கள், ஊழல்வாதிகள் என்று அறிக்கைகளை வெளியிட்டு நாடாளுமன்றத்தையே கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
நான் 1989 மஹஜன எக்சத் பெரமுன (මහජන එක්සත් පෙරමුණ) ஊடாக நாடாளுமன்றுக்கு தெரிவு செய்து நாடாளுமன்றின் பெயருக்கும் நாட்டின் பெயருக்கும் கௌரவத்தினை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் வகையில் உள்ள அமைச்சர்.
ஒரு நூல் துண்டையாவது திருடாத நான், ஐம்பது சதமாவது நான் மோசடி செய்திருந்தால் அதனை நிரூபிக்குமாறு நான் இந்த நாடாளுமன்றுக்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி அடிக்கடி கூறியுள்ளேன்.
எனது பிள்ளைகள் இந்த நாட்டில் அரசியல் செய்வதில்லை. நான் மட்டும் தான் இறுதியாக அரசியலில் உள்ளவன். இதனை நிரூபிக்கும் பட்சத்தில் அவர்கள் பாராளுமன்றத்தில் மட்டுமன்றி என்றைக்கும் அரசியல் செயற்பாட்டில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பதனை அறிந்து ஊடக நிறுவனங்கள் தொடர்ந்தும் செயற்படுவது வருத்தமளிக்கின்றது..” என்றார்.