கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியான யாழ்ப்பாணம் மாசியப்பிட்டியைச் சேர்ந்த கந்தசாமி கிருஷ்ணகுமார் (50), இன்று (29) மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட இவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அது 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து சயனைட் குப்பிகள் மீட்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.
எனினும், ஆயுதங்களுடன் தனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். தண்டனைக் காலம் நிறைவடைந்து 11 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர் தாயகம் திரும்பியிருந்தார். இந்நிலையில், இலங்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர், இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரது விடுதலைக்கான நடவடிக்கைகளை சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது







