சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உறுதியளிப்பட்ட நிதியில் ஒரு பகுதியை விடுவித்திருக்கின்றது. இதனைத் தொடர்ந்து பொருளாதார இறுக்கத்தில் சில தளர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. நாணய நிதியத்தின் நிபந்தனைகள் முறையாக நிவர்த்தி செய்யப்படும் போது பொருளாதார நிலைமைகள் வேகமாக மாற்றமடையலாம்.
இறக்குமதி கட்டுப்பாடுகளும் நீக்கப்படலாம். அவைகள் படிப்படியாக நீக்கப்பட்டேயாக வேண்டும். ஏனெனில், நாணய நிதியத்தை பொறுத்த வரையில், இலங்கையின் வருமான மூலங்களை அதிகரிக்க வேண்டும். இறக்குமதி கட்டுப்பாடுகளை பேணிக்கொண்டு வருமான மூலங்களை அதிகரிக்க முடியாது.
தமிழ் சூழலில் ஒரு நம்பிக்கை நிலவுகின்றது. எல்லாவற்றையும் உணர்ச்சிவசப்பட்டு நோக்குவது போன்றே சர்வதேச நாணய நிதிய விடயங்களிலும் தமிழ் அரசியல்வாதிகளும் ,புத்திஜீவிகள் என் போரும் உணர்ச்சிவசப்படுகின்றனர். கனடாவின் பாராளுமன்ற உறுப்பினரான ஹரிசங்கரி அரசியல் தீர்வு தொடர்பில் நாணய நிதியம் சில நிபந்தனைகளை விதித்திருக்கலாம் – ஆனால், விதிக்கவில்லையென்று
குறிப்பிட்டிருக்கின்றார். முதலில் நாணய நிதியத்தின் எல்லையை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான இலக்கு நாடுகளில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகும். ஒரு நாடு பொருளாதார ரீதியில் திவாலாகும் போது, அது ஏனைய நாடுகளையும் பாதிக்கும் – இதனை தடுப்பதற்கு குறித்த நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தூக்கிவிட வேண்டும்.
இந்த அடிப்படையில்தான் நாணய நிதியம் ஒரு நாட்டின் பொருளாதார விடயங்களில் தலையீடு செய்யும். குறித்த நாடு நாணய நிதியத்தின் உதவியை கோரும்போது, நாணய நிதியம் சில நிபந்தனைகளோடு
குறித்த உதவியை வழங்குவதற்கு இணங்கும். அதேவேளை, குறித்த நாடு நாணய நிதியத்தின் நிபந்தனைகளை சரியாக நிவர்த்தி செய்கின்றதா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்கும்.
கடனுதவியை வழங்கும் போது, குறித்த நாட்டின் உள்ளக அரசியல் விடயங்களில் தலையீடு செய்யாது. ஆனால், நல்லாட்சி மற்றும் சட்டம் ஒழுங்கு விடயத்தில் கவனம் செலுத்தும். ஒரு நாட்டில் நல்லாட்சி
கட்டமைப்பு முறையாக கடைப்பிடிக்கப்பட்டால்தான், அந்த நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமாக நிலைபெறும். இந்தப் பின்புலத்தில் நாணய நிதியத்தின் கடனுதவிகளை பெறும் நாடுகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் நல்லாட்சி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நாரணய நிதியம் வலியுறுத்தும்.
நல்லாட்சி விடயத்தில் நாணய நிதியத்தின் பங்களிப்பு எவ்வாறு அமையுமென்பது தொடர்பில் அந்த அமைப்புக்கு என்று கொள்கை நிலைப்பாடு உண்டு. நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையால்
1997இல், இணக்கம் காணப்பட்ட ஏற்பாடுகள் இருக்கின்றன.
இது பின்னர் 2018இல் மீளவும் திருத்தியமைக்கப்பட்டது. ஒரு நாட்டின் நல்லாட்சியில் நாணய நிதியத்தின் பங்களிப்பு எவ்வாறு அமையுமென்று, குறித்த கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதற்கப்பால் உள்நாட்டில் அரசியலை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும், சிறுபான்மை மக்களின் பிரச்னையை எவ்வாறு தீர்க்க வேண்டுமென்று நாணய நிதியம் பரிந்துரைகளை முன்வைக்காது – அவ்வாறு முன்வைக்கவும் முடியாது. இதனைப் புரிந்து கொண்டே, நாணய நிதியம் தொடர்பில் பேச முற்பட வேண்டும். சாமானியர்கள் உணர்ச்சிவசப்படுவதில் தவறில்லை. ஆனால், மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும், அரசியல்
பிரதிநிதிகள் என்போர், விடயங்களை பேசுவதற்கு முன்னர், நாணய நிதியத்தின் கொள்கை நிலைப்பாடுகளை குறைந்தளவிலாவது படிக்க வேண்டியது அவசியமானது.