உலகளவில் கவனம் பெற்றுள்ள ‘சுப்பிரமணியம்’ என அழைக்கப்படும் நாயை அதன் உரிமையாளர், பொலிஸாரின் அனுமதியுடன் முச்சக்கர வண்டி மூலம் கதிர்காமத்துக்கு அழைத்துச் சென்ற சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது.
தகவல்களின் படி, குறித்த நாயின் உரிமையாளர் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட கதிர்காம பாதயாத்திரையில் பங்கேற்றிருந்தார். பாதயாத்திரை முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் உள்ளிட்ட பகுதிகளை கடந்து சுமார் 400 கிலோமீற்றர் பயணித்து பாணமையை சென்றடைந்தது.

இந்த நிலையில், பாதயாத்திரை குழுவின் தலைமைப் பொறுப்பாளருக்கும் நாய் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டையடுத்து, அவர் குழுவிலிருந்து விலகி பாணமை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், பாணமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த அவர், ‘சுப்பிரமணியம்’ என பெயரிடப்பட்ட நாய் தாம் வளர்த்து வந்ததாகவும், பாதயாத்திரை முழுவதும் தம்மை பின்தொடர்ந்து வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அந்த நாயை பயன்படுத்தி சிலர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, பொலிஸாரின் அனுமதியுடன் நாயை முச்சக்கர வண்டியில் ஏற்றி இன்று காலை கதிர்காமத்துக்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கடந்த நாட்களில் கல்முனை பகுதியில் இந்த நாய் தாக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலான கவனத்தை ஈர்த்தது. அந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே, கல்முனையில் இந்த நாய் தாக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரால் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பான சில சமூக ஊடகப் பதிவுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









