நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் நபரொருவர், 3,820 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின்கீழ், பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்பின்போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ.பி.வி. கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிகாட்டலிலும், கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ. இப்னு அஸாரின் மேற்பார்வையிலும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட புலனாய்வு அதிகாரி ஏ.ஆர்.எம். பிர்தௌஸ் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி. பிரகலாதன் தலைமையிலான விசேட குழு சந்தேகநபரின் வீட்டை முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







