‘கோட்சில்லா எதிர் கோங்’ திரைப்படத் தொடரில் ஜியா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற காதுகேளாத இளம் நடிகை , அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் தனது 18ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
மேரிலாந்தின் ஐயம்ஸ்வில் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 2.50 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே ஒரு வாகனம் சம்பந்தப்பட்ட இந்த விபத்துக்கு அதிக வேகம் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்ற 19 வயது இளைஞர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், வாகனத்தில் பயணித்த மற்றொருவர் சம்பவ இடத்திலேயே மருத்துவ சிகிச்சையைப் பெற மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெய்லி ஹட்டிலின் மறைவை அவரது தந்தை ஜோசுவா ஹட்டில், அமெரிக்க சைகை மொழியில் வெளியிட்ட காணொளி மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை, அவர் கல்வி பயின்ற டெக்சாஸ் காதுகேளாதோர் பள்ளியும் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டதுடன், குடும்பத்தினரின் தனியுரிமையை மதிக்குமாறும் விபத்து தொடர்பாக ஆதாரமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு வெளியான ‘கோட்சில்லா எதிர் கோங்’ திரைப்படத்தில் ஜியா என்ற அநாதை சிறுமியாக நடித்த கெய்லி ஹட்டில், 2024 ஆம் ஆண்டு வெளியான ‘கோட்சில்லா × கோங்: புதிய பேரரசு’ திரைப்படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது இயல்பான நடிப்பும், காதுகேளாத சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை உலக திரைப்படத் துறையில் வலுப்படுத்திய பங்களிப்பும் பரவலாகப் பாராட்டப்பட்டன.
அவரது திடீர் மறைவுக்கு திரைப்பட ரசிகர்கள், கலைஞர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றன.








