பௌதிகப் பரிசோதனை இன்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் எந்தவொரு தகவலோ ஆவணங்களோ தங்களிடம் இல்லை என இலங்கைச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
‘வினிவித பவுண்டேஷன்’ சார்பில் சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே சுங்கத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
பௌதிகப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்களின் பட்டியல் கோரப்பட்டிருந்த நிலையில், அவை தொடர்பான ஆவணங்கள் அல்லது தகவல்கள் தங்களிடம் இல்லை என சுங்கப் பொருட்கள் பரிசோதனைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இத்தீர்மானத்தில் திருப்தியில்லையெனில் 14 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








