மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து பேரின் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தஷ்ஷினி இன்று (29) உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளாகக் குறிப்பிடப்படும் முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். பிள்ளையான் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு கல்லடிப் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம், காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சி உறுப்பினர் உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் வவுணதீவு, கரையாக்கன்தீவு பகுதியில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவை தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளாகக் குறிப்பிடப்படும் முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்திருந்தது.
குறித்த ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கடந்த ஜூன் 17ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று இடம்பெற்ற விசாரணையைத் தொடர்ந்து பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அதேவேளை, லண்டனில் வசித்து வருவதாகக் குறிப்பிடப்படும் சந்தேகநபரான ‘பொலிஸ் பாயிஸ்’ என அழைக்கப்படும் முகமட் பாய்ஸுக்கு எதிராக தொடர்ந்து பிடியாணை பிறப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.








