யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்–2” போராட்டத்தின் இறுதிநாள் நிகழ்வுகள், திங்கட்கிழமை (17.08.2026), யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.
தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நான்கு நாள் கவனயீர்ப்புப் போராட்டத்தின் இறுதி நாளில், பெருமளவான பொதுமக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தரப்பினரும் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதி நாள் நிகழ்வாக யாழ்ப்பாணம் பொது நூலகப் பகுதியில் இருந்து ஆரம்பமான பேரணி, நகரின் முக்கிய வீதிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு, நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐ.நா. பிரதிநிதிகளிடம் மகஜர் கையளிக்கப்பட்டதாக போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“நீதியின் ஓலம்–2” போராட்டம், தமிழினப் படுகொலை தொடர்பில் சர்வதேச நீதியை வலியுறுத்தும் தொடர்ச்சியான மக்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டதாக தாயகச் செயலணி முன்னதாக அறிவித்திருந்தது.




























முக்கிய கோரிக்கைகள்
- செம்மணி உள்ளிட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்துதல்
- மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல்
- சர்வதேச சமூகமும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை
- காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதி மற்றும் உண்மையை உறுதி செய்தல்
- நீண்டகாலமாக நிலவி வரும் தண்டனையின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்
செம்மணியின் மண்ணில் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.








