கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஆறு பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்குமாறு முஸ்லிம் கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆறு பேரும் எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தின் உரிமைகள் தொடர்பில் குரல் கொடுக்க வேண்டிய அரசியல் தலைவர்கள் இந்த விவகாரத்தில் மௌனம் காப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள கோரிக்கையாளர்கள், முஸ்லிம் கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியுதீன் ஆகியோர் குறித்த ஆறு பேருக்கும் இலவச சட்ட உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஒன்பது தாதியர்களையும் மீண்டும் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அவர்களின் நிரந்தர பணியிடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளதுடன், உரிய தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.








