இலங்கையின் பல மாகாணங்களில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஐந்து மாவட்டங்களில் உள்ள 22 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 24,144 குடும்பங்களைச் சேர்ந்த 75,734 பேருக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வறண்ட வானிலை காரணமாக மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இன்று பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் முன்னறிவித்துள்ளது.
மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என சிரேஷ்ட வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.








