நாட்டின் ஜனநாயக அமைப்பையும் எதிர்க்கட்சியையும் அடக்குவதற்கான செயற்திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (06) சிறிகொத்தவில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள், வைத்தியர்கள் மற்றும் பௌத்த துறவிகள் உள்ளிட்ட தொழிற்சார் குழுக்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், அரசியல்வாதிகள் போதிய காரணங்களின்றி கைது செய்யப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், போதுமான காரணங்கள் இன்றி அரசியல்வாதிகள் கைது செய்யப்படுவதாகவும், இந்நடவடிக்கைகள் ஜனநாயகம், எதிர்க்கட்சி மற்றும் சுயாதீன தொழிற்சங்கங்களை அடக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் விவரித்தார்.
மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு போதிய வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அரசியலமைப்பையும் மக்களின் இறையாண்மையையும் பாதுகாக்க அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினார்.
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பிலும் கருத்து தெரிவித்த ரணில், அதன் சட்டபூர்வ தன்மையை உறுதிப்படுத்த நீதிமன்றத்தின் ஊடாக சர்வஜன வாக்கெடுப்பை கோரியுள்ளதாக தெரிவித்தார்.







