தற்போது பயன்பாட்டில் உள்ள உலக வரைபடத்தில் காணப்படும் பரப்பளவு தொடர்பான தவறுகளைத் திருத்தி, நாடுகள் மற்றும் கண்டங்களின் உண்மையான பரப்பளவை துல்லியமாக பிரதிபலிக்கும் புதிய உலக வரைபடத்தை உருவாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
டோகோ முன்வைத்த இந்தத் தீர்மானத்திற்கு 164 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. ஆறு நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காத நிலையில், அமெரிக்கா மட்டும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது.
16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட தற்போதைய வரைபட முறையில், பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகள் அவற்றின் உண்மையான பரப்பளவை விட சிறியதாகவும், துருவப் பகுதிகளை அண்மித்த நாடுகள் பெரிதாகவும் காட்டப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், கண்டங்கள் மற்றும் நாடுகளின் உண்மையான பரப்பளவை துல்லியமாகக் காட்டக்கூடிய புதிய வரைபட முறையை உருவாக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
எனினும், இவ்வாறான விடயங்களுக்கு ஐ.நா. கவனம் செலுத்துவது அதன் மீதான நம்பகத்தன்மையை மேலும் பாதிக்கும் என அமெரிக்கா விமர்சித்துள்ளது.







