இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) மற்றும் தம்புள்ளையில் உள்ள ‘திய ஜனனி’ மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் ஆகியவை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் இன்று (18) திறந்து வைக்கப்படவுள்ளன.
நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை அதிகரிக்கவும், தேசிய மின்சாரக் கட்டமைப்பின் நிலைத்தன்மையை மேம்படுத்தவும் இந்த மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. அனுராதபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு 10 மெகாவாட் கொள்ளளவு கொண்டது.
மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் தேசியத் திட்டத்தின் கீழ், தம்புள்ளையில் உள்ள இப்பன்கடுவ குளத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘திய ஜனனி’ மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையமும் இன்று பிற்பகல் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது.
‘திய ஜனனி’ சூரிய மின்சக்தி நிலையமானது தேசிய மின்சாரக் கட்டமைப்பில் 5 மெகாவாட் கொள்ளளவை இணைப்பதோடு, சுமார் 10,000 குடும்பங்களுக்கு மின்சாரத்தை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.







