இங்கிலாந்துக்கு எதிரான தொடர்ச்சியான தோல்வியைத் தொடர்ந்து இலங்கை அணியின் வீரர் தெரிவு, முடிவெடுப்பில் நிலைத்தன்மை மற்றும் உடற்தகுதி குறித்து முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தொலைக்காட்சி கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அவர், இரு அணிகளுக்கும் இடையில் துடுப்பாட்டம், உடற்தகுதி மற்றும் போட்டி உத்தியில் குறிப்பிடத்தக்க இடைவெளி காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
கமில் மிஷாராவை மூன்றாம் இலக்கத்தில் களமிறக்கியமை மற்றும் மகீஷ் தீக்ஷனவை அணியில் இருந்து நீக்கியமை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
சிறந்த வீரர்களை சரியாக அடையாளம் கண்டு, அவர்களிடம் நம்பிக்கை வைத்து தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என சங்கக்கார தெரிவித்தார்.
மேலும், வீரர்கள் தங்களது உடற்தகுதி மற்றும் உடல் வலிமையை மேம்படுத்துவதுடன், போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, இங்கிலாந்தின் முன்னாள் தலைவர் நாசர் ஹுசைனும் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை விமர்சித்ததுடன், தற்போதைய வீரர்கள் பந்தை வலுவாக அடிப்பதில் அதிக கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார்.
இங்கிலாந்து அணி தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது T20 போட்டி எஞ்சியுள்ளது. இதனுடன், இலங்கைக்கு எதிரான T20 சர்வதேச போட்டிகளில் இங்கிலாந்தின் தொடர்ச்சியான வெற்றிகள் 14 ஆக அதிகரித்துள்ளன.







