இலங்கையில் மனநல விசேட வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சதுரி சுரவீர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் தற்போது சுமார் 100 முதல் 120 வரையிலான மனநல விசேட வைத்தியர்களே உள்ளதாகவும், நோயாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவானது எனவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் வழங்கப்படும் மனநல மருத்துவப் பயிற்சிக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு காணப்படுவதால், அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகளுக்கு வைத்தியர்கள் செல்வதும் இந்தப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எவருக்கும் மனநலப் பாதிப்புகள் ஏற்படலாம் என தெரிவித்த அவர், அறிகுறிகள் தென்பட்டால் தகுதியான வைத்தியர் அல்லது மனநல வைத்தியரிடம் சிகிச்சை பெறுவது அவசியம் என வலியுறுத்தினார்.








