கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதன் பின்னணியில் மத ரீதியான காரணங்கள் இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அலுவலகத்தில் சட்டத்தரணிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றிய அவர், ஞானசார தேரரின் காவியுடையை அகற்றுவது தொடர்பில் எழுந்த சர்ச்சைகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ரணில் குறிப்பிட்டார். எனினும், சிறையில் இருந்தபோதும் அவர் காவியுடையை அணிந்திருக்க அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அப்போதைய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள, பௌத்த மதத் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் காவியுடை அகற்றப்படாது என உறுதியளித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

பின்னர், ஞானசார தேரரின் காவியுடையை அகற்றுவது மத ரீதியான சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடும் என மூத்த பௌத்த பிக்குகள் கவலை வெளியிட்டதாகவும், இந்த விவகாரம் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடப்பட்டதாகவும் ரணில் தெரிவித்தார்.
இதனையடுத்து, சுமார் ஒரு வருடம் சிறைத்தண்டனை அனுபவித்திருந்த ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க மைத்திரிபால சிறிசேன தீர்மானித்ததாகவும், அப்போது பிரதமராக இருந்த தானும் அமைச்சர்கள் சிலருடன் கலந்துரையாடி அந்த முடிவுக்கு ஆதரவளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் நீதிமன்றத் தீர்ப்புடன் மாத்திரம் தொடர்புடையதல்ல என்றும், பௌத்த மத ஒழுக்கம் மற்றும் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கான அரசின் அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்பு ஆகியவற்றுடனும் தொடர்புடையது என்றும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
மேலும், ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும்போது விரிவான எழுத்துப்பூர்வ விளக்கங்களை வெளியிடுவது கட்டாயமில்லை எனத் தெரிவித்த அவர், ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதை எதிர்த்த கொள்கை மாற்றுக்கான நிலையத்தின் (CPA) நிலைப்பாடு குறித்தும் கேள்வி எழுப்பினார்.







