மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் திண்மக்கழிவு முகாமைத்துவத்தினால் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட குழுவொன்றை நியமிக்க மாநகரசபை தீர்மானித்துள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அமர்வில், திருப்பெருந்துறை வட்டார உறுப்பினர் சண்முகதாஸன், திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தினால் அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும், நீதிமன்றக் கட்டளை பெற்றும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த பிரதி முதல்வர் வை. தினேஸ்குமார், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட குழுவொன்றை நியமித்து, அப்பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில், மாநகரசபை அமர்வு ஆரம்பத்தில் மாநகர கீதம் இசைக்கப்படாமல் மௌன இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டமைக்கு உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, மாநகர கீதம் இசைக்கப்பட்டு சபை நடவடிக்கைகள் தொடர்ந்தன.
மேலும், மாநகரசபை ஊழியர் நியமனங்களில் முறைகேடுகள் இடம்பெற்றதாக உறுப்பினர் உதயராஜ் முன்வைத்த குற்றச்சாட்டுகளால் சபையில் காரசாரமான விவாதங்களும் இடம்பெற்றன.







