தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பாடசாலை உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்படும் பெறுமதி சேர் வரி (VAT) உள்ளிட்ட வரிகளை நீக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒக்டோபர் 9ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ள அவர், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி வழங்கிய வரி நிவாரண வாக்குறுதிகளை 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பாடசாலைப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், கல்வி உபகரணங்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால், முட்டை மற்றும் குழந்தைகளுக்கான பால் உள்ளிட்ட பொருட்களுக்கு வரிச் சலுகைகளை வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதுடன், சிறுவர்களின் கல்வி மற்றும் போஷாக்கை மேம்படுத்தவும் உதவும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.







