பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்ற இரண்டாவது டி:20 சர்வதேசப் போட்டியில், இலங்கை அணியை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, தொடரையும் கைப்பற்றியது.
ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய மாஸ் சதாக்கத், தனது முதல் டி:20 சர்வதேச சதத்தைப் பதிவு செய்யும் வாய்ப்பை வெறும் நான்கு ஓட்டங்களால் தவறவிட்டார். அவர் 51 பந்துகளில் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கலாக 96 ஓட்டங்களை விளாசினார்.

அதேவேளை, பாகிஸ்தான் அணியின் தலைவர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 44 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுப்படுத்தினார்.
பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஃபகர் ஜமான் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் அணிக்கு வலுவான தொடக்கத்தை வழங்கினர். ஃபகர் ஜமான் 17 பந்துகளில் 22 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், மகேஷ் தீக்ஷனவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து, ஃபர்ஹான் மற்றும் மாஸ் சதாக்கத் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 88 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர். 15ஆவது ஓவரில் தசுன் ஷானக்கவின் பந்துவீச்சில் ஃபர்ஹான் 73 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
எனினும், சதாக்கத் தனது அதிரடியைத் தொடர்ந்து வெளிப்படுத்தினார். ஏழு சிக்ஸர்களை விளாசிய அவர், சதத்தை நெருங்கிய நிலையில் ஆட்டமிழந்தார். இறுதிக்கட்டத்தில் ஹசன் நவாஸ் 9 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணியின் சார்பில் மகேஷ் தீக்ஷன, ஈஷான் மலிங்க மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் ஏமாற்றம்
216 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, ஆரம்பம் முதலே தடுமாறியது. முதல் ஓவரிலேயே 5 ஓட்டங்களைப் பெற்றிருந்த லஹிரு உதார ஆட்டமிழந்தார்.
சினெத் ஜயவர்தன 22 ஓட்டங்களைப் பெற்ற போதிலும், இலங்கை அணி 35 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்கு உள்ளானது.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் முகமது இம்ரான் சிறப்பாகச் செயற்பட்டார். அவர் நான்கு ஓவர்களில் 11 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குறிப்பாக, சேஹான் அராச்சிகேவை ஓட்டம் எதுவுமின்றி ஆட்டமிழக்கச் செய்தார்.
கமிந்து மெண்டிஸ் 23 ஓட்டங்களையும், சமிந்து விக்ரமசிங்க 24 பந்துகளில் 29 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதிக்கட்டத்தில் மகேஷ் தீக்ஷன 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களைப் பெற்றுப் போராடினார்.
எனினும், இலங்கை அணியால் வெற்றி இலக்கை நோக்கி முன்னேற முடியவில்லை. பாகிஸ்தான் அணியின் சார்பில் சல்மான் மிர்சா இரண்டு விக்கெட்டுகளையும், சயிம் அயூப் மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி:20 சர்வதேசப் போட்டி இன்று (13) ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது.







