இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையான ஒன்பது மாத காலப்பகுதியில், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களிடமிருந்து நாட்டுக்கு அனுப்பப்பட்ட பணத்தின் பெறுமதி 6.86 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் மொத்தமாக 6,865.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணவனுப்பலாகக் கிடைத்துள்ளன.
கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் கிடைத்த 5,811.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் 1,053.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளன.
இதேவேளை, கடந்த செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 734.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்திருந்த நிலையில், இவ்வாண்டு அதனுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டுப் பணவனுப்பலில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் நாட்டின் அந்நியச் செலாவணி வருவாயில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








