சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர்களின் மத உரிமைகளை வலியுறுத்தி, மகா சங்கத்தினரின் தலைமையில் முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை இன்று (13) நான்காவது நாளாக வரக்காபொல நகரிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
‘காவிக்கு நீதி – சுதந்திரத்தின் பாதயாத்திரை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பேரணி, இன்றைய தினம் நிட்டம்புவ நகரம் வரை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் திகதி கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து இந்தப் பாதயாத்திரை ஆரம்பமானது. அன்றைய தினம் கடுகண்ணாவை வரை பயணித்த பேரணி, தனது முதல் நாள் பயணத்தை நிறைவு செய்தது.
இரண்டாம் நாளான கடந்த 11ஆம் திகதி கடுகண்ணாவையிலிருந்து ஆரம்பமான பேரணி, கேகாலை நகரைச் சென்றடைந்தது. தொடர்ந்து, நேற்று (12) கேகாலையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த பேரணி, வரக்காபொல நகரை வந்தடைந்தது.
தொடர்ந்து நிட்டம்புவ மற்றும் கடவத்தை ஆகிய நகரங்களைக் கடந்து, எதிர்வரும் 15ஆம் திகதியளவில் கொழும்பைச் சென்றடைய இந்தப் பாதயாத்திரை திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.








