மட்டக்களப்பில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐவர் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாத்துரை தஷ்ஷினி, இன்று செவ்வாய்க்கிழமை (13) காணொளி ஊடாகப் பிள்ளையானை ஆஜர்படுத்தியும், ஏனைய இரு சந்தேகநபர்களை நேரில் ஆஜர்படுத்தியும் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பின் கல்லடிப் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.
இச்சம்பவங்கள் தொடர்பாகப் பிள்ளையான் கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோர் கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பாகப் பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராகக் கடந்த 2026ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விளக்கமறியலில் உள்ள முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பிள்ளையான் காணொளி ஊடாக ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, பிள்ளையான் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், லண்டனில் வசிப்பதாகக் கூறப்படும் மற்றொரு சந்தேகநபரான முகமட் பாய்ஸ் எனப்படும் பொலிஸ் பாயிஸுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையைத் தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.








