2024ஆம் ஆண்டு குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பின்படி, இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை 3,921,124 ஆக அதிகரித்துள்ளது. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதமாகும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
இவர்களில் 1,712,535 பேர் ஆண்களாகவும், 2,208,589 பேர் பெண்களாகவும் உள்ளனர்.
முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், நலன்களை உறுதிப்படுத்துதல் மற்றும் தேவையான சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை தேசிய முதியோர் செயலகமும் தேசிய சபையும் முன்னெடுத்து வருகின்றன.
2025ஆம் ஆண்டில் 44,899 முதியோர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 2026ஆம் ஆண்டில் 45,000 அட்டைகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 2026ஆம் ஆண்டில் 25 முதியோர் இல்லங்களைப் புனரமைத்து, தேவையான உபகரணங்களை வழங்குவதுடன், 500 பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கவும் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.








