2026ஆம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பின் முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களின் பெயர்ப்பட்டியல் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, 23,006 பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 3-I (அ) தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான எழுத்துப் பரீட்சை நடத்தப்பட்டது.
கடந்த 2026 மே மாதம் 24ஆம் திகதி பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட எழுத்துப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வசிப்பிட மாகாணத்திற்குரிய இணையத்தளத்திற்குச் சென்று, பரீட்சைக்குத் தோற்றிய மொழிமூலம், பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தமது தகுதியைச் சரிபார்த்துக்கொள்ள முடியும்.
மாகாணங்களுக்கான இணைய இணைப்புகள்
மேல் மாகாணம்: https://moe.gov.lk/en/western-province/
மத்திய மாகாணம்: https://moe.gov.lk/en/central-province/
தென் மாகாணம்: https://moe.gov.lk/en/southern-province/
வட மாகாணம்: https://moe.gov.lk/en/northern-province/
கிழக்கு மாகாணம்: https://moe.gov.lk/en/eastern-province/
வடமேல் மாகாணம்: https://moe.gov.lk/en/north-western-province/
வடமத்திய மாகாணம்: https://moe.gov.lk/en/north-central/
ஊவா மாகாணம்: https://moe.gov.lk/en/uva-province/
சப்ரகமுவ மாகாணம்: https://moe.gov.lk/en/sabaragamuwa-province/
விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்
நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்கள், தமது பட்டப்படிப்பைப் பெற்றுக்கொண்ட பல்கலைக்கழகங்களிலிருந்து பெற வேண்டிய ஆவணங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக 2026 ஒக்டோபர் 20ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வுகள் 2026 நவம்பர் மாதத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், திகதி மற்றும் நேரம் ஆகியவை அடங்கிய அழைப்புக் கடிதங்கள் பின்னர் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
மேலும், நேர்முகத் தேர்வு அட்டவணைகள் இம்மாத இறுதியில் கல்வி அமைச்சின் இணையத்தளம் மற்றும் சம்பந்தப்பட்ட மாகாண அரச சேவை ஆணைக்குழுக்கள் அல்லது மாகாணக் கல்வி அமைச்சுகளின் இணையத்தளங்கள் ஊடாகவும் வெளியிடப்படவுள்ளன.







