இலங்கை ஊடாக போலி வர்த்தக ஆவணங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குப் பொருட்களை இறக்குமதி செய்யும் மோசடி நடவடிக்கையொன்றை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) கண்டுபிடித்துள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குப் பொருட்களை நேரடியாக இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், போலியான வர்த்தக ஆவணங்களைப் பயன்படுத்தி இலங்கை ஊடாக இந்த இறக்குமதி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது, பாகிஸ்தானிலிருந்து பெறப்பட்ட கனிமப் பொருட்கள் மற்றும் உப்பு உள்ளிட்ட 73 இலட்சம் கிலோகிராமிற்கும் அதிகமான பொருட்கள் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணை மற்றும் சோதனை நடவடிக்கைகளின்போது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மார்ச் மாதம் முதல் ஒன்பது இறக்குமதியாளர்களால் 295 கொள்கலன்களில் குறித்த பொருட்கள் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட இந்தப் பொருட்களின் பெறுமதி 30 கோடி இந்திய ரூபாயைத் தாண்டுவதாகக் கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்று, கொழும்புத் துறைமுகத்தைப் பயன்படுத்தி இந்தப் பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த இறக்குமதி நடவடிக்கையில் போலி ஆவணங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன, இதன் பின்னணியில் மேலும் யாருக்குத் தொடர்புள்ளது என்பன தொடர்பில் இந்திய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








