இலங்கையில் 2026ஆம் ஆண்டுக்கான வடகீழ்ப் பருவமழை இன்று (15) அதிகாலை ஆரம்பமாகியுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூருக்கும் அட்டாளைச்சேனைக்கும் இடைப்பட்ட பகுதியில் வடகீழ்ப் பருவக்காற்று ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாண்டு வடகீழ்ப் பருவமழை மற்றும் இரண்டாம் இடைப்பருவ மழைவீழ்ச்சி ஆகியன சராசரி அளவைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குத் தெற்காக குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றுச் சுழற்சி காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த மழையுடனான வானிலை எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடரக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எட்டு மாவட்டங்களுக்கு மிகக் கனமழை வாய்ப்பு
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய எட்டு மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
அதேவேளை, வடமத்திய, மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், மழை தொடர்ச்சியாகப் பெய்யாமல் இடையிடையே வெயில் மற்றும் தெளிவான வானிலையுடன் மாறுபட்ட வானிலை நிலவக்கூடும் எனப் பேராசிரியர் விளக்கமளித்துள்ளார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
இந்தக் காலப்பகுதியில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பேராசிரியர் பிரதீபராஜா அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி வரை கடலுக்குச் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒக்டோபர் 25ஆம் திகதி புதிய தாழமுக்கம் உருவாகுமா?
இதனிடையே, எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதி இலங்கைக்குக் கிழக்காக மத்திய வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
குறித்த தாழமுக்கம் வடக்கு மற்றும் வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து வட தமிழகத்தில் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், அதன் தீவிரத்தன்மை மற்றும் நகர்வுப் பாதை தொடர்பில் அடுத்த சில நாட்களிலேயே உறுதியான தகவல்களை வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.








