ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு (Dialysis) பிரிவு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பிரபல தொழிலதிபர் எம்.எல்.எம். தாஸிம் ஹாஜியார் தனது சொந்த நிதியில் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் செலவிட்டு, மறைந்த தனது பெற்றோரின் நினைவாக இப்பிரிவை அமைத்துக் கொடுத்துள்ளார்.
ஏறாவூர் பிரதேசத்தில் 70 இற்கும் மேற்பட்டோர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சுமார் 30 பேர் தொடர்ச்சியாக டயாலிசிஸ் சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளனர். இதுவரை சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உள்ளிட்ட தொலைதூர வைத்தியசாலைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.
இந்நிலையில், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலேயே இச்சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை நோயாளர்களுக்கும் பிரதேச மக்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

இப்பிரிவை அமைப்பதற்காக டயாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளிட்ட வசதிகளை வழங்கி, மக்களின் சுகாதார நலனுக்காகப் பெரும் நிதியைச் செலவிட்ட தாஸிம் ஹாஜியாரின் சேவை பாராட்டுக்குரியது என கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பாராட்டுச் செய்தியில், தாஸிம் ஹாஜியாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும் நற்கூலிகளையும் வழங்க வேண்டுமெனவும், அவரது மறைந்த பெற்றோருக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் உயரிய சொர்க்கத்தை வழங்க வேண்டுமெனவும் பிரார்த்தித்துள்ளார்.
மேலும், இப்பிரிவை விரைவாக இயங்கச் செய்வதற்காகப் பணியாற்றிய வைத்திய நிபுணர்கள், வைத்தியசாலை அத்தியட்சகர், வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.








