சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள், அரச அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு எட்டப்படாததால் போராட்டத்தைக் கைவிட மறுத்துள்ளனர்.
ஞானசார தேரரின் விடுதலையை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிடும் வரை தமது போராட்டம் தொடரும் எனப் பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேர், கொழும்பு கோட்டை ஜனாதிபதி செயலக வளாகம் உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் தங்கியிருப்பதைத் தடுத்து, கோட்டை நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளுடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க முன்னதாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எனினும், இந்த விவகாரம் தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு குறைந்தது ஒரு மாத காலம் தேவைப்படும் என ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தெரிவித்ததாகப் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் அதிருப்தியடைந்துள்ள பிக்குகள், தமது கோரிக்கைக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
கடும் மழைக்கு மத்தியிலும் கொழும்பை வந்தடைந்த பிக்குகள், ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், நீதிமன்றத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
அதேசமயம் இன்று (16) காலையும் தேரர்கள் ஜனாதிபதி செயலகம் முன்னர் இருந்து வெளியாகவில்லை.








