பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவின் இரண்டு முக்கிய நகரங்களுக்கான விமானச் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு – தம்மாம் மற்றும் கொழும்பு – ரியாத் இடையிலான அனைத்து விமானச் சேவைகளும் எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கே தாம் அதிக முன்னுரிமை வழங்குவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்பட்டு, விமானச் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாதகமான சூழல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சேவைகள் வழமைக்குத் திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குறித்த விமானச் சேவைகளில் பயணிக்க முன்பதிவு செய்துள்ள பயணிகள், தமது பயணங்கள் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கையிலுள்ள பயணிகள் 1979 என்ற தொலைபேசி இலக்கத்துடனும், வெளிநாடுகளிலுள்ள பயணிகள் +94 11 777 1979 என்ற இலக்கத்துடனும் தொடர்புகொள்ள முடியும்.அத்துடன், +94 74 444 1979 என்ற WhatsApp இலக்கத்தின் ஊடாகவும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், பயணிகள் தமது பயண முகவர்களைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ அல்லது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவோ மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளலாம்.








