கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள் குழுவினர், கொழும்பு விகார மகாதேவி பூங்காவில் தங்கியுள்ளனர்.
இன்று (16) நண்பகல் வரை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகள், பின்னர் புத்தசாசன அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். எனினும், தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை பூங்காவில் தங்கியிருக்கப் போவதாக பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கடந்த 10ஆம் திகதி கண்டி புனித தந்ததாது ஆலய வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியில் பங்கேற்ற பிக்குகள், நேற்று (15) ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்தனர்.
ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் தெளிவான பதிலை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிய நிலையில், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கூடாரங்களை அமைக்க முயன்றபோது பொலிஸாருடன் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, கோட்டை நீதிவான் நீதிமன்ற உத்தரவு தொடர்பில் பொலிஸார் அறிவித்ததைத் தொடர்ந்து, பிக்குகள் ஜனாதிபதி செயலகப் பகுதியிலிருந்து வெளியேறி விகார மகாதேவி பூங்காவில் தங்கியுள்ளனர்.








