மட்டக்களப்பில் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மொத்தமாக 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
முதலாவது வழக்கு
14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அவரது பெரியப்பாவான 43 வயதுடைய கந்தசாமி கமலேஸ்வரன் எனப்படும் கமலுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் திகதி சட்டரீதியான பாதுகாப்பில் இருந்த சிறுமியைக் கவர்ந்து சென்றமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.
இதற்கமைய, சிறுமியைக் கவர்ந்து சென்ற குற்றத்துக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும், பாலியல் துஷ்பிரயோகக் குற்றத்துக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன. அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கவும், அதனைச் செலுத்தத் தவறினால் இரண்டு வருட சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி இந்தத் தீர்ப்பை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் அறிவித்தார்.
இரண்டாவது வழக்கு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில், தனது மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்திரன் சங்கீதன் என்பவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாங்கேணி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வழக்கு விசாரணைகளின் பின்னர் குற்றவாளியாக இனங்காணப்பட்ட அவருக்கு 5,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று (16) வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
இரு வழக்குகளிலும் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி. தர்சிகா ஆகியோர் வழக்குத் தொடுநர் தரப்பில் ஆஜராகியிருந்தனர்.








