இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 135 கிலோ மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் நாகை மாவட்ட நிர்வாகி உட்பட நான்கு பேரை இந்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு 100 கோடி முதல் 135 கோடி இந்திய ரூபாய் வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வேளாங்கண்ணி அருகே பல இடங்களில் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, நாகை மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான பூபாலன் (42), அவரது சகோதரர் பார்த்திபன் (29), சுகன் (27), சதீஷ் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பூபாலனின் வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பூபாலனின் மனைவி இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால், இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்தி இந்தக் கடத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர். மேலும், கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர் ஒருவரிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பூபாலனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாகத் தவெக நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாறன் அறிவித்துள்ளார். அத்துடன், கட்சி நிர்வாகிகள் அவருடன் தொடர்புகளைப் பேணக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.







