இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜைக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட பயங்கரக் கூட்ட நெரிசலில் 13 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளனர்.
கொல்கத்தாவின் வடபகுதியில் உள்ள சோர்பகன் (Chorbagan) துர்கா பூஜைப் பந்தலில் கடந்த சனிக்கிழமை (17) மாலை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துர்கா பூஜையின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான மகா சப்தமி கொண்டாட்டத்திற்காகப் பெருமளவிலான பக்தர்கள் அங்கு திரண்டிருந்த நிலையில், திடீரெனப் பெய்த கனமழையால் மக்கள் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறுகிய பாதைகள் மற்றும் நுழைவு, வெளியேறும் பகுதிகளில் ஏற்பட்ட நெரிசலும் விபத்தின் தீவிரத்தை அதிகரித்ததாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பூஜை ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம் இந்திய ரூபாய் நிதியுதவியும், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவருக்கு அரச வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கான மருத்துவச் செலவுகளையும் மாநில அரசு ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் இந்திய ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பெருமளவிலான மக்கள் ஒன்றுகூடும் மத நிகழ்வுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.








