நாடு முழுவதும் இன்புளுவென்சா காய்ச்சல் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நோய்த்தொற்று மேலும் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இது குறித்துத் தொற்றுநோயியல் பிரிவின் சமூக மருத்துவ நிபுணரும் இன்புளுவென்சா தடுப்புப் பிரிவின் அதிகாரியுமான வைத்தியர் ஜீவதாரன் ஹம்சானந்தி தெரிவிக்கையில்,
நாடு முழுவதிலும் உள்ள கண்காணிப்பு வைத்தியசாலைகள் மூலம் தொற்றுநோயியல் பிரிவு இன்புளுவென்சா பரவலைக் கண்காணித்து வருவதாகவும், வாரம் தோறும் கண்டறியப்படும் தரவுகள் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.
தற்போது இன்புளுவென்சா பரவல் அதிகரித்து வருவது போல் தோன்றுகிறது. வழக்கமான எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், தொற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவையாகவுள்ளன.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் பின்பற்றப்பட்டதைப் போன்ற தனிநபர் சுகாதாரம் மற்றும் சுவாச சுகாதாரப் பழக்கவழக்கங்கள் பின்பற்றப்பட வேண்டும்.
பெருந்தொற்றுக் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நடத்தை மாற்றங்களை நாம் பராமரித்தால், காய்ச்சல் திடீரெனப் பெருமளவில் பரவுவதைத் தடுக்க முடியும்.
சுவாசப் பாதை நோய் அறிகுறிகள் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியமாகும்.
கொவிட் காலத்தில் கட்டாயமாக்கப்பட்டதைப் போல் அனைவரும் முகக்கவசம் அணிவதற்குப் பதிலாக, நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் ஏனையோருக்குத் தொற்று பரவாமல் தடுக்கவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
இன்புளுவென்சா சிகிச்சைக்கான ‘ஒசெல்டாமிவிர்’ என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்து, மருத்துவ விநியோகப்பிரிவு மற்றும் பிராந்திய மருத்துவ விநியோகப் பிரிவுகள் மூலமாக வைத்தியசாலைகளில் தாராளமாக விநியோக்கப்படுகின்றது என்றார்.







